Saturday, January 17, 2009

உண்டோ பிறப்பு?


உண்டோ பிறப்பு?

மரத்தினைச் சுமக்க வைத்தார்
மன்பதை சுமக்கும் உன்னை!
சிரத்தினில் முள்ளை வைத்தார்
தெருவினில் இழுத்து வந்தார்
மரத்தினில் அடித்துக் கொன்றார்
மறுபடிப் பிறந்து வந்தீர்!
மக்களிவர் புதைத்து வைத்த
உண்மைக்கும் பிறப்பு(இறப்பு) உண்டோ?

கண்ணின் ஏக்கம் தெரிகிறதா?

27-03-1977
(கடற்கரை கவியரங்கில் முதல்பரிசு பெற்ற கவிதை)

கண்ணின் ஏக்கம் தெரிகிறதா?

கண்ணின் ஏக்கம் தெரிகிறதா?
கண்கள் துடிப்பதுதெரிகிறதா?- அது
காணத் துடிப்பது புரிகிறதா?

மண்ணின் நல்ல மலர்ச்சியினை
மனதில் கொள்ளத் துடிக்கிறதா?

*******
அன்பாய் அன்னை அருகமர்ந்து
அருசுவை உண்டி படைக்கயிலே
இன்னும் கொஞ்சம் உண்ணப்பா
என்றே அவளும் சொல்லையிலே

அன்பு கொஞ்சும் அவள் முகத்தை
அற்பன் நானும் கண்டிடவே!
கண்கள் துடிப்பது தெரிகிறதா?
அது காணத் துடிப்பது தெரிகிறதா?

*****
என்னை நாடி வந்தவளும்
எனக்கே சொந்தம் ஆனவளும்
என்னை அன்பால் கழுவிடுவாள்
எச்சில் சோற்றை விழுங்கிடுவாள்

அன்பு கொஞ்சும் அவள் முகத்தை
அற்பன் நானும் கண்டிடவே!
கண்கள் துடிப்பது தெரிகிறதா?
அது காணத் துடிப்பது தெரிகிறதா?

**********
சின்னப் பையன் இழுக்கையிலே
சிறுகை கொண்டு அணைக்கையிலே
மின்னும் கண்ணால் பேசையிலே
மிளிரும் மழலை ஒலிக்கையிலே

அன்பு கொஞ்சும் அவள் முகத்தை
அற்பன் நானும் கண்டிடவே!
கண்கள் துடிப்பது தெரிகிறதா?
அது காணத் துடிப்பது தெரிகிறதா?

*****

கண்கள் எனக்கோ இலையென்று
கண்ணன் அவனும் அறியாமல்
கண்கள் பொத்தி ஆடிடுவான்!
கண்ணா மூச்சி காட்டிடுவான்

சின்னப் பையன் அவனாட்டம்
சேர்ந்து நானும் ஆடிடவே
கண்கள் துடிப்பது தெரிகிறதா?
அது காணத் துடிப்பது தெரிகிறதா?

********

இமைகள் அசைந்து பார்க்கிறதே—அதன்
இயக்கம் தோல்வி ஆயிடுதே!
சுமைகள் குறைய வழியிலையோ?—இச்
சொர்க்கம் காண வழியிலையோ?


இறைஞ்சிக் கேட்பது புரியலையா?
இரந்து கேட்பதும் புரியலையா?
இறவா உனக்கும் கண்ணிலையா?
இரக்கம் என்பதும் அங்கில்லையா?


**********

மனமிது! மனமது!

மனமிது! மனமது!

ஆனந்த இல்லமிது
அழகுக் கோயிலிது!
தேனந்த இல்லமது
சித்திரச் சிறப்புமது!
“ நீ ” யந்த இல்லமது
நினக்குள சிறப்புமது!
ஏ(ய்)யிந்தக் கதை சொல்வேன்!
என்மகனே நீ கேட்பாய்!!



))))))))))))))))))+((((((((((((((((((

Sunday, January 4, 2009

அன்னாசி


அன்னாசி போலே முள்ளி ருக்கும்
ஆனாலும் உள்ளே கள்ளிருக்கும்!
உன்னாசி எனக்கு வேண்டும் எந்தன்
கண்ணா நீ எனக்கு வேண்டும்!

காதல் சொல்லும் கண்கள் கொண்ட
கவிதை சொல்லும் பெண்மை கொண்ட
பெண்ணாசி பெற்ற நானே- பெறும்
பேறு பெற்ற வனாவேன்!

வாழ்த்துக்கள் வாங்க
வழிமேல் விழி வைத்துக் –காத்திருப்பேன்!
தாழ்த்தியதும் நேரம் நீ……..
தவித்திருந்து விழிபூத்துக் காத்திருப்பேன்!



2000
புத்தாயிரத்தில் புதுப் பாரதம்!


புத்தாயிரம் ஆண்டு பொலிவாயிரம் சேர்க்கட்டும்!
புத்தாயிரம் ஆண்டு புகழ் கோடி சேர்க்கட்டும்!—ஆண்டு
பத்தாயிரம் ஆனாலும் பாரதம் பாரதம்தான் எனப்
பறை சாற்றிச் சொல்லட்டும், அகிலமெல்லாம் வெல்லட்டும்.!

வெற்றாயிரம் சமர் செய்வதை விட்டுவிட்டு
பெற்றாயிரம் பெருமைகள் சேர்க்கட்டும்!
கற்றாயிரம் கலைகள் கனிவோடு சேர்க்கட்டும்!
கணிப்பொறி உலகில் கம்பீரம் காட்டட்டும்!


செத்தாயிரம் பேர்தந்த சொந்த நாட்டை
சொத்தாயிரம் எனப் பேணிச் சுதந்திரம் காத்திடுவோம்!

விண்ணாயிரம் வென்றிடவே
வெற்றிகள் பெற்றிடவே
கண்ணாயிரம் தந்தவளே!
கண்மணியே பாரதமே!
பெண்மணியே பேரணங்கே!
பெற்றவளே பேரரசி
உண்மையுடன் போற்றுகிறோம்!
உனை நாங்கள் வணங்குகிறோம்.!